Sunday, January 10, 2010

யாழ் இளைஞர்களே! மகிந்த ராஜபக்சவின் முகத்தில் கரி பூசிய உங்கள் வீரத்தை மெச்சுகிறேன்

யாழ் நகரம் இப்போது கேளிக்கை கூடாரமாகி விட்டது என்றும் யாழ் இளைஞர்கள் வீணர்கள் போல செயற்படுகிறார்கள் என்றும் புலத்திலிருந்து வந்து சேரும் பணம் யாழ்பபாணத்தை கலாசாரச் சீரழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் வந்த செய்திகளைப் படித்து நொந்து போயிருந்த எங்களுக்கு இன்று ஆறுதலான செய்தி ஒன்று எட்டியிருக்கிறது.

தான் கொன்றொழித்த தமிழ் மக்களின் சகோதரர்களிடமே வாக்குப் பிச்சை கேட்டு வந்த மகிந்த ராஜபக்ச வேலையில்லாப் பட்டதாரிகளைச் சந்தித்து தேர்தலில் எனக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள், நான் பதவிக்கு வந்ததுமே உங்களுக்கு தொழில் தருகிறேன் என்று கேட்க ஏற்கனவே உங்களுக்கு வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்து விட்ட நாங்கள் எப்படி உங்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று எதிர்க் கேள்வி கேட்டு மகிந்தவின் முகத்தில் கரி பூசியிருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டும் பிரபாகரனே எம் தலைவர் என்று மார்தட்டிக் கொண்டும் திரிந்த சிவநாதன் கிசோர், சிறிகாந்தா போன்றவர்கள் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சுருதி மாறிப் பாடிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு அட தமிழ் மக்களின் உறுதி அவ்வளவு தானா என்று தப்புக் கணக்குப் போட்டு உங்களிடம் இப்படி ஒரு கேள்வியை மகிந்தர் கேட்டிருக்கலாம். ஆனால் சொரணை கெட்ட ஒரு சில தமிழர்களை வைத்து ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் தப்புக் கணக்குப் போடாதே என்று மகிந்தவுக்கு உறைக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.

சிங்கள தேசத்தின் தலைவர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எண்ணி காய் நகர்த்தும் அயல் தேசத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பியும் ‘பாசமிகு கவனிப்பு’களால் ஏமாந்தும் தமிழக் கூட்டமை;பபின் ஒற்றுமையைக் கேலிக்கூத்தாக்கியும் தமிழ் வாக்குகளைச் சிதைக்கவும் ‘சுயஇச்சை’யாய் களமிறங்கியிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே உங்களிடம் ஒரு எலும்புத் துண்டை விட்டெறிந்த மகிந்தவிற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.

அத்தனை வசதிகளுடன் புலத்திலே வாழ்ந்து கொண்டு ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று கோசம் எழுப்பிக் கொண்டு திரிந்தவர்கள் முள்ளிவாய்காலிலே தமிழரின் போராட்டம் பின்னடைவைக் கண்டதும் இனி எல்லாமுமே நீ தான் என்று கூறிக் கொண்டு அலரிமாளிகையை நோக்கி விமானமேறியதைக் கண்டு வெதும்பிப் போயிருந்த எங்களுக்கு தமிழ் மண்ணிலே இருந்து கொண்டு மண்டியிட மறுத்த உங்கள் வீரம் ஆறுதலளிக்கிறது.

அற்ப பணத்தாசைக்காக விலைபோகும் புல்லுருவிகள் மத்தியிலே மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் பழி வாங்கப் படுவோம் என்று தெரிந்தும் நெஞ்சை நமிர்த்தி உங்கள் மனச்சாட்சிக்குப் பங்கமில்லாமல் பேசியிருக்கிறீர்கள்.

பட்டதாரி இளைஞர்களே! பனிபடரந்த தேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தாயக தேசத்தின் நிலை கண்டும் பணத்துக்கும் பதவிக்கும் விலை போகும் ஈனப் பிறவிகளின் செயல் கண்டும் நொந்து போயிருக்கும் எந்தன் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

No comments:

Post a Comment